திருச்செந்தூர் முருகன் பற்றிய சிறப்பு தகவல்கள் – Interesting Facts About Thiruchendur Murugan Temple

On this special day, Team Ishtadevata would like to share some of the interesting facts about Thiruchendur Murugan temple which has been shared by one of our whatsapp group member.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

3. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

4. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

5. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

6. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

7. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

8. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

9. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

10. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

11. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

12. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

13. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

14. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

15. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

16. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

17. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

18. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

19. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

20. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

21. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

22. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன.

23. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

Thiruchendur Murugan _Temple_2

24. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

25. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

26. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

27. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

28. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

29. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

30. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

31. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

32. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

33. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

34. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

35. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

36. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

37. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

38. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

39. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை – 3

ஆடி, தை அமாவாசை – 2

ஆவணி, மாசித் திருவிழா – 10

ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் – 2

மாத விசாகம் – 12

ஆனி தை வருடாபிஷேகம் – 3

தீபாவளி, மகாசிவராத்திரி – 4

மொத்தம் 36

40. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

41. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

42. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

43. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

44. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

45. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

46. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

47. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி ராஜகோபுரத்தை கட்டினார்.

48. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

49. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

50. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

51. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

52. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

 

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP